குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2000, ஆண்களுக்கும் இலவச பேருந்து: அதிமுக-வின் மெகா தேர்தல் அறிக்கை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக-வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். 'மக்களின் மனசாட்சி, அதிமுக-வின் தேர்தல் அறிக்கை' என்ற முழக்கத்துடன் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்து, நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத்தொடர்ந்து தற்போது EPS தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன
வாக்குறுதிகள்
தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய வாக்குறுதிகள்
1. மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ₹2,000 நிதியுதவி வழங்கப்படும் (தற்போதுள்ள தொகையை விட இருமடங்கு). 2. இலவச சிலிண்டர்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 3. இலவச பேருந்து பயணம்: அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு வழங்கப்படுவது போலவே, ஆண்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயணம் விரிவுபடுத்தப்படும். 4. கல்விக் கடன் ரத்து: மாணவர்கள் வங்கிகளில் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். 5. முதியோர் ஓய்வூதியம்: முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹1,200-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும்.
வீடு
வீடு, வேலைவாய்ப்பு திட்டங்கள்
6. அம்மா இல்லம் திட்டம்: வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு 'அம்மா இல்லம்' திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். 7. வேலைவாய்ப்பு உறுதி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். 8. ஜல்லிக்கட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு: ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்கள் குடும்பத்திற்கு ₹10 லட்சம் மற்றும் காயமடைபவர்களுக்கு ₹2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 9. அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். 10. சிறுபான்மையினர் நலன்: சிறுபான்மையினப் பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.