ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கட்சி உத்தரவை மீறி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதற்காக எம்ஜிஆர் இளைஞரணி முன்னாள் துணை செயலாளர் செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) அறிவித்தார்.
ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் முருகன், முன்பு 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் சின்னப் பிரச்சினை காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றார். பின்னர், இபிஎஸ் அணியில் இணைந்த அவர், அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் போட்டியை புறக்கணிக்க அதிமுக தலைமை முடிவு செய்தது.
ஆனால், சுயேச்சை வேட்பாளராக செந்தில் முருகன் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.
கட்சிக் கட்டுப்பாடு
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை
அவரது நடவடிக்கை கட்சியின் கொள்கைகளை மீறுவதாகவும், தலைமையின் முடிவுக்கு சவால் விடுவதாகவும் கருதப்பட்டது. செந்தில் முருகனின் நடவடிக்கைகள் அதிமுகவின் கொள்கைகளுக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரானது என இபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஒழுக்கம் மற்றும் ஒற்றுமைக்கான கட்சியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, கட்சித் தொண்டர்கள் அவருடன் கட்சி ரீதியான எந்தத் தொடர்பையும் பேண வேண்டாம் என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்க உள்ள ஈரோடு இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை புறக்கணித்ததால், திமுக - நாம் தமிழர் என இருமுனைபோட்டியாக மாறியுள்ளது.
திமுக சார்பில் வி.சி.சந்திரகுமாரும், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.