பாஜக கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது அதிமுக
பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அதிகாரபூர்வமாக அதிமுக விலகியது. இன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக தலைமையிலான NDAவில்(தேசிய ஜனநாயகக் கூட்டணி) இருந்தும் விலகுவதற்கு அதிமுக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் சின்னமுமான சி.என்.அண்ணாதுரை குறித்து தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. 1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாதுரை இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக அண்ணாமலை முன்பு கூறி இருந்தார்.
இந்த செய்தியை பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
அப்போது, அந்த சர்ச்சையால் சி.என்.அண்ணாதுரை மதுரையில் தலைமறைவாக இருந்து, மன்னிப்பு கேட்ட பிறகு தான் தப்பிச் சென்றார் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், பாஜகவுடனான உறவை முறித்து கொள்ள ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த செய்தி வெளியிடப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.