Page Loader
திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

எழுதியவர் Sindhuja SM
Mar 13, 2024
07:00 pm

செய்தி முன்னோட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக தலைவர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து, அவரது அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது. பொன்முடி இன்று அல்லது நாளை அமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின் போது, உயர்கல்வி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த திமுக தலைவர் பொன்முடி அவரது மனைவி விசாலாக்ஷியுடன் சேர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

தமிழகம்

விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை முதலில் விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை விடுவித்தது. ஆனால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை தொடர்ந்து, அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் பொன்முடி இழந்தார் . அதன் பிறகு, அவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனையடுத்து, திமுக தலைவர் பொன்முடியின் அமைச்சர் பதவி அவருக்கு திரும்ப வழங்கப்பட உள்ளது.