நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்றும், விண்கலம் தரையிறங்கிய இடத்தை அதன் தலைநகராகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்து மதகுருவான சுவாமி சக்ரபாணி மகாராஜின் ஒரு வினோத கோரிக்கையை விடுத்துள்ளார். அனைத்திந்திய இந்து மகாசபையின் தேசியத் தலைவரான இவர், பிற மதத்தினர் நிலவின் மீது உரிமை கொண்டாடுவதற்கு முன்பு, இந்திய-அரசு நிலவில் தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும், இதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த புதன்கிழமை நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, அது தரையிறங்கிய இடம் இனி 'சிவ்சக்தி பாயிண்ட்' என்று அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்க கோமியத்தை குடிக்க சொன்னவர்
இந்நிலையில், ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கும் சுவாமி சக்ரபாணி மகாராஜின், "எந்த பயங்கரவாதிகளும் நிலவிற்கு சென்றடையாத வகையில் இந்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என்று கூறியுள்ளார். சுவாமி சக்ரபாணி மகாராஜின் தனது வினோத கருத்துக்களுக்கு பெயர் போனவர். 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்த போது, இவர் பசு மாட்டின் கோமியத்தை குடித்தால் கொரோனா பரவாது என்று கூறி, டெல்லியில் "கோமிய விருந்து" ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். "விலங்குகளைக் கொன்று உண்பவர்களால்தான் கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனாவை தடுக்க உலகத் தலைவர்கள் மாட்டு மூத்திரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். ஏனென்றால், கடவுள் இந்திய பசுவில் மட்டுமே வசிக்கிறார்." என்று சுவாமி சக்ரபாணி அப்போது கூறியிருந்தார்.