மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு
தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்த நிலையில், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் மூலம் இரண்டு காலியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அருண் கோயலின் ராஜினாமா மூலம் காலியான ஒரு தேர்தல் ஆணையர் பதவிக்கும், அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு மூலம் காலியான மற்றொரு தேர்தல் ஆணையர் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
மத்திய பாஜக அரசை சாடும் எதிர்க்கட்சிகள்
தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று ராஜினாமா செய்தார். எனவே, தற்போது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே செயலில் உள்ள ஒரு உறுப்பினராக இருக்கிறார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமா விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்த எதிர்க்கட்சிகள், அவரது ராஜினாமா "ஆழ்ந்த கவலை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது. அரசாங்கம் இதற்கு நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.