சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே நடக்கவிருந்த பொது செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த அனைத்து வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது. அதனையடுத்து அவர் அதிமுக பொது செயலாளராக அதிகாரபூர்வமாக பொறுப்பும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியது.
இறுதி விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக'வின் பொது செயலாளராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நடக்கும் செயலாளர்கள் கூட்டம் இது என்றும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலினை அதிமுக எடப்பாடி தலைமையில் எதிர்கொள்ளவுள்ளது. இதற்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கத்துடன் எடப்பாடி பழனிச்சாமி இந்த கூட்டத்தினை அறிவித்திருந்தார். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில் அதற்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் தொடுத்த வழக்கு நேற்று(ஏப்ரல்.,3) விசாரிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ் தரப்பு கோரிய இடைக்கால தடையினை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் இதன் இறுதி விசாரணையினை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே வரும் 7ம் தேதி நடக்கவிருந்த செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.