தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் நேற்றைய(மார்ச்.,23) அறிக்கையின்படி 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பானது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டி 517ஆக பதிவாகியுள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக RTPCR சோதனைக்காக 3,162 நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன, இதனை தொடர்ந்து வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதமும் நேற்று 2 சதவிகிதத்தை தாண்டியது என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 19, செங்கல்பட்டில் 12, சேலம் மற்றும் கோவையில் தலா 8, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் தலா 5 என புது கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் 3 பாதிப்புகள், மாநிலத்தின் மற்ற 17 மாவட்டங்களில் 1 முதல் 2 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
எக்ஸ்.பி.பி.,-1.16 என்னும் புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் 517 செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளில் 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும், யாருக்கும் ஆக்சிஜன் ஆதரவோ, தீவிர சிகிச்சையோ தேவைப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் 'இன்சகாக்' என்னும் இந்திய கொரோனா பகுப்பாய்வு அமைப்பானது புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் எக்ஸ்.பி.பி.,-1.16 என்னும் புதிய உருமாறிய கொரோனா தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று தெரிவித்தார். அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, இமாச்சல் பிரதேஷ், கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகளவு பரவி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.