7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி: விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை
நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், மகளிர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்துள்ள பேட்டியில், 7 முறை கருக்கலைப்பு செய்ததாக கூறியிருந்தார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் மற்றும் போலீஸ் விசாரணையிலும் இவர் சீமானுக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலங்களை அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்து இன்று(செப்.,7) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மருத்துவ பரிசோதனை இவ்வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
இதனை தொடர்ந்து இந்த மருத்துவ பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் பரிசோதனைகளின் அறிக்கைகள் அடிப்படையில் சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகாரின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக சீமான் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகள் வெளியான நிலையில், அவருக்கான சம்மன் கொடுக்கவே கோவை சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் சீமான் தரப்பு, சென்னைக்கு வந்த பின்னர் சம்மனை பெற்றுக்கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இத்தகைய சூழலில், விஜயலட்சுமிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை, இந்த வழக்கில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.