Loading...
பணமோசடி வழக்கில் மதபோதகர் அப்துல் பாசித் புகாரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
பணமோசடி வழக்கில் மதபோதகர் அப்துல் பாசித் புகாரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

பணமோசடி வழக்கில் மதபோதகர் அப்துல் பாசித் புகாரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 22, 2026
05:59 pm

செய்தி முன்னோட்டம்

பல்வேறு பணம் மற்றும் நகை மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பிரபல இஸ்லாமிய மதபோதகர் அப்துல் பாசித் புகாரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் தீவிரத்தன்மை, கணிசமான தொகை தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை நிலுவையில் இருப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவர் மீது பல்வேறு நபர்களிடம் பணம் மற்றும் நகைகளைப் பெற்றுத் திருப்பித் தரவில்லை எனக் சென்னை உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பண மோசடி

ஹோட்டல் தொழிலுக்காக ₹50 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார்

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி, ஹோட்டல் தொழிலை மேம்படுத்துவதற்காக புகார்தாரரிடமிருந்து ஐந்து தவணைகளில் மொத்தம் ₹50 லட்சம் பெற்றுக்கொண்டு திருப்பி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு BNS பிரிவுகள் 318(4) மற்றும் 316(2) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பெண்ணிடம் இருந்து ₹10 லட்சம் மற்றும் நகைகளை பெற்றுத் திருப்பி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கடன்கள்

பெறப்பட்ட பணத்தைப் பிற கடன்களை அடைக்கப் பயன்படுத்தியதாகத் தகவல்

புகார்தாரரிடம் குறிப்பிட்ட தொழில் நோக்கத்திற்காகப் பெறப்பட்ட பணம், மற்ற கடனாளிகளுக்குப் பணம் செலுத்தவும், இதர நிலுவை பிரச்சினைகளை சமாளிக்கவும், விஆர் மாலில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த மற்றொரு உணவகத்திற்கான முன்பணமாகவும் பயன்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் பிரபலமான மதபோதகராக அறியப்படும் இவரை நம்பி முதலீடு மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காகப் பணம் மற்றும் நகைகளைக் கொடுத்து ஏமாந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

காவல்துறை வாதம்

வழக்கமான குற்றவாளி என நீதிமன்றத்தில் போலிஸார் வாதம்

இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், அப்துல் பாசித் புகாரி "தொடர்ந்து மோசடி செய்பவர்" என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றும் கூறப்பட்டது.

வழக்கின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை, கணிசமான தொகை தொடர்புடையது மற்றும் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதையும், ஜாமீனில் வெளியே வந்தால் இதேபோன்ற குற்றத்தில் மீண்டும் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக முன்வைக்கப்பட்ட வாதங்களையும் கருத்தில் கொண்டு, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

தேடுதல்

போலிஸார் தீவிரத் தேடுதல் வேட்டை

முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அப்துல் பாசித் புகாரியைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கான போலிஸ் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளைக் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ADVERTISEMENT