ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதனை நம்பிய வாடிக்கையாளர்களான கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் இந்நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் நடிகரும், பாஜக ஓபிசி-பிரிவு தலைவருமான ஆர்.கே.சுரேஷ்க்கு சம்மந்தம் இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவரது வங்கிக்கணக்குகளை முடக்கி பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி இதுகுறித்த விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னர் வந்த நிலையில், தனக்கும் இந்த மோசடி வழக்குக்கும் சம்மந்தமில்லை. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் தாம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக வாதாடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கம் குறித்த ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தினை நாடும்படி ஆர்.கே.சுரேஷ் தரப்பிற்கு அறிவுறுத்தி வழக்கினை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.