ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
டெல்லியின் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று(மே 26) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யேந்தர் ஜெயின் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயின் அனுமதியின்றி டெல்லியை விட்டு வெளியேற கூடாது என்றும், ஊடகங்கள் முன் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சிகிச்சைக்கு பின் சத்யேந்தர் ஜெயின் மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவர் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது.
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
திகார் சிறையின் குளியலறையில் தலைசுற்றல் காரணமாக மயங்கி விழுந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியின் முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் முதலில் தீன் தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் மூச்சுத்திணறல் காரணமாக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்தர் ஜெயின், ஷெல் நிறுவனங்கள் மூலம் பணமோசடி செய்ததாகவும், சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் கூறி கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்க இயக்குநரகம்(ED) அவரை கைது செய்தது.