'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு
திமுக தலைவரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக குறிவைக்கப்படுகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், உதயநிதி, பாஜக, திமுக என்ற பெயர் எதையும் குறிப்பிடாமல், சனாதன தர்மத்தைப் பற்றி பேசியதால் இன்று ஒரு "சின்னப்பிள்ளை" குறிவைக்கப்படுகிறது என்று கூறினார். சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசிய கருத்து ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், திராவிட இயக்கத்தின் தலைவர்களான மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும் இதைப் பற்றி கடந்த காலங்களில் பேசியுள்ளனர் என்று தெரிவித்தார்.
'பெரியார் எந்த கட்சிக்கும் சொந்தமானவர் இல்லை': கமல்ஹாசன்
சமூக அவலங்களுக்கு எதிரான கோபத்தை 'பெரியார்' ஈ.வெ. ராமசாமியின் வாழ்க்கையிலிருந்து புரிந்து கொள்ள முடியும் என்றும் கமல்ஹாசன் கூறினார். சனாதனம் என்ற சொல்லை தன்னைப் போன்றவர்கள் புரிந்துகொள்ள காரணமாக இருந்தவரும் பெரியார் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "ஒரு கோவில் நிர்வாகியாக இருந்தும், காசியில் இருந்தபோது பூஜைகள் செய்திருந்தாலும், அதையெல்லாம் துறந்து, தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் பெரியார்" என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். "பெரியார் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று ஆளும் தி.மு.க.வும், வேறு எந்தக் கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது; தமிழகம் முழுவதும் அவரைத் தலைவராகக் கொண்டாட வேண்டும். பெரியாரை போற்றுபவர்களில் நானும் ஒருவன்" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.