ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
நேற்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை நந்தனத்தில் நடத்தப்பட இருந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டது. நேற்று பிற்பகல் வடபழனி, திருவெற்றியூர், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் லேசான மழையும், எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் ஆகிய பகுதிகளில் தொடர் மழையும் பெய்தது. இதனால், சென்னையில் இயல்பு வாழ்க்கை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் ஏற்பாடு செய்யப்பற்றிருந்த ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரியும் இதனால் ரத்து செய்யப்பட்டது.
சென்னையின் புதிய கலாச்சார சின்னம்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரகுமான், "நம் அரசாங்கத்தின் உதவியுடன், கலை நிகழ்ச்சிகள், மெகா ஷோக்கள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அடுத்த கட்ட வசதிகள் கொண்ட அரங்கத்தை சென்னையில் நாம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன்." என்று தெரிவித்திருந்தார். அந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அந்த நீண்ட நாள் ஆசையை சென்னை விரைவில் நிறைவேற்றும்! ECRரில் திறக்கப்பட இருக்கும் கலைஞர் மாநாட்டு மையம், பெரிய கச்சேரிகள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய வசதிகளை கொண்ட உலகத்தரம் வாய்ந்த அரங்கமாக இருக்கும். ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் வசதி மற்றும் சிறந்த இணைப்புடன் கூடிய இந்த அரங்கம் நகரத்தின் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்!" என்று தெரிவித்துள்ளார்.