'அம்மான்னா சும்மா இல்ல டா' - கன்றுக்குட்டியை காப்பாற்ற 5 கிமீ வரை ஆட்டோவுக்கு பின்னால் ஓடிய தாய் பசு
நாடு, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும் உலகம் முழுவதும் தாய் பாசம் என்பது ஒன்றுதான். இது மனிதர்களுக்கு மட்டுமில்லை விலங்களுக்கும் பொருந்தும். இதற்கு சான்றாக தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூரில் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அது என்னவென்று தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம். தஞ்சாவூர் மாவட்டம் செக்கடி பகுதியினை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ ஓட்டுநரான இவரது வீட்டில் பசுமாடு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அந்த வீட்டில் உள்ளோர் இதனை தங்கள் பிள்ளை போல் பேணி வளர்த்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சபரிநாதன் தினமும் காலை தனது பசு மாட்டினை மேய்ச்சலுக்காக வெளியில் அனுப்புவதை வழக்கமாக வைத்துளளார். அவ்வாறு மேய்ச்சலுக்காக அனுப்பப்பட்ட இந்த பசு நிறைமாத கர்ப்பிணி.
ஆட்டோவை வழிமறித்த பசு மாடு
இந்நிலையில், தொம்பன்குடிசை பகுதியருகே சபரிநாதனின் பசு மேய்ந்து கொண்டிருந்தப்பொழுதே பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிகிறது. அங்கேயே அது கன்றுக்குட்டியினை ஈன்றுள்ளது. இதனிடையே வெகுநேரம் ஆகியும் பசு வீடு திரும்பவில்லை என்று சபரிநாதன் தேடி அலைந்த பொழுது கன்றுக்குட்டியுடன் பசுமாடு நிற்பதை பார்த்துள்ளார். அதனையடுத்து, கன்றுக்குட்டியினை மீட்டு ஆட்டோவில் தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இதனை கண்டு தனது கன்று தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச்செல்வதாக கருதி, பாசத்தில் ஆட்டோவை பின்தொடர்ந்து ஓடியுள்ளது. கிட்டத்தட்ட 5கிமீ.,தூரம்வரை பசு ஓடி சென்று ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளது. அதையடுத்து கன்றுக்குட்டியை அதன் தாயிடம் அவிழ்த்துவிட்டுள்ளார் சபரிநாதன், அப்போது கன்றை அரவணைத்து பசு பாலூட்டியது. பின்னர் தாயையும் சேயையும் சபரிநாதன் வீட்டிற்கு அழைத்து சென்றார். இச்சம்பவம் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.