15 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட்! 90 வயது ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.2.5 கோடி மோசடி
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 90 வயதான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரி என்பவரை சைபர் கிரைம் கும்பல் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.2.50 கோடி பணத்தை மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மும்பை சிபிஐ அதிகாரி போல சீருடையில் வாட்ஸ்அப்பில் பேசிய நபர், பண்டாரியின் எஸ்பிஐ கணக்கில் ரூ.50 கோடி ஹவாலா பணத்தில் இருந்து ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரைக் கைது செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
பணப் பரிமாற்றம்
15 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் பணப் பரிமாற்றம்
குடும்பத்தினரிடம் இதுபற்றி தெரிவிக்கக் கூடாது என மிரட்டப்பட்டதால், பயத்தின் காரணமாக தனது பரஸ்பர நிதி மற்றும் வங்கி முதலீட்டு விவரங்களை மோசடி கும்பலிடம் பண்டாரி பகிர்ந்துள்ளார்.
வழக்கு விசாரணை காரணங்களுக்காக பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி, ஆகஸ்ட் 3 முதல் 10 வரை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.2,50,51,000 தொகையை அவரிடமிருந்து மோசடிக் கும்பல் பறித்துள்ளது.
மேலும், ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் சாட்களை அழிக்குமாறு கூறி ரகசியமாக செயல்பட்டுள்ளனர்.
வங்கி அதிகாரி
வங்கி மேலாளரின் விழிப்புணர்வால் தப்பிய பிபிஎஃப் பணம்
பணத்தை இழந்த பிறகு, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கில் இருந்தும் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யுமாறு மோசடி கும்பல் அவரை வற்புறுத்தியுள்ளது.
இதற்காக எஸ்பிஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளையை பண்டாரி அணுகிய போது, அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் பணப் பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தினார்.
விசாரணையில் அவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கியிருப்பதை உணர்த்திய மேலாளர், உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
வழக்கு
காவல்துறையில் புகார் மற்றும் வழக்குப்பதிவு
பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதியின் மருமகன் ரவீந்திர சிங் மோஹ்னோத் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெய்ப்பூரின் ஜோதி நகர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.