வெளிநாட்டு கல்வி மீது மோகம் காட்டும் 90 சதவீத இந்திய பெற்றோர்கள்; ஆய்வில் வெளியான தகவல்
எச்எஸ்பிசியின் வாழ்க்கைத் தர அறிக்கை 2024இன் படி, அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வியைக் கொடுக்க விரும்புவதாக தெரிய வந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள 11,000க்கும் மேற்பட்ட வசதி படைத்தவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின்படி, 90% இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வெளிநாட்டுக் கல்விக்கு நிதியளிக்க விரும்புகிறார்கள் என்றும், சில சமயங்களில் அவர்களின் ஓய்வுக்கால சேமிப்பில் 64% வரை செலவழிக்க தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது. பதிலளித்தவர்களில் 78% இந்தியர்கள் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளைக் கொண்டுள்ளனர் அல்லது அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள் என்று அறிக்கை காட்டுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் இதற்காக அதிகம் விரும்பும் இடமாக உள்ளது.
வெளிநாட்டு கல்விக்கு நிதியளிப்பதில் தாக்கத்தை ஏற்படும் வாழ்க்கை செலவு
வாழ்க்கைச் செலவு அதிகரித்து, பணவீக்கம் சேமிப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்தக் கல்வி லட்சியங்களுக்கு நிதியளிப்பது பல குடும்பங்களுக்கு முக்கியமான கவலையாக மாறியுள்ளது. பல பெற்றோருக்கு, தங்கள் குழந்தையின் கல்விக்கு நிதியளிப்பது என்பது தனிப்பட்ட சேமிப்பை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு பதிலளித்தவர்களில் 53% பேர் கல்வி சேமிப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளனர். 40% பேர் தங்கள் குழந்தை மாணவர் கடன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். மேலும், 51% பேர் உதவித்தொகை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். கணிசமான 27% பேர் செலவுகளை ஈடுகட்ட சொத்துக்களை விற்பதைக் கூட பரிசீலிக்கிறார்கள். நிதிக் கவலைகளுக்கு மேல், பெற்றோர்கள் பாடத் தேர்வு, பல்கலைக்கழக சேர்க்கைகள் மற்றும் பிற புறப்படுவதற்கு முந்தைய தயாரிப்புகளின் சிக்கல்களால் மன அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர்.