மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்
மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு இம்பால் மற்றும் காங்போக்பி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லையில் இருக்கும் அகிஜாங் கிராமத்தில் நேற்று இரவு 10 முதல் 10:30 மணி வரையில் ஒரு கும்பல் ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தியது. இதனால், 9 பேர் உயிரிழந்தனர் என்றும் 10 பேர் படுகாயமடைந்தனர் என்றும் போலீஸார் இன்று தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்ததை அடுத்து தாக்குதல்காரர்கள் துப்பாக்கியை பயன்படுத்த தொடங்கினர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
"நேற்று இரவு 10-10:30 மணியளவில் அகிஜாங் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதனால் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது." என்று கிழக்கு இம்பால் போலீஸ் சூப்பிரண்டு கே.சிவகாந்த சிங் தெரிவித்துள்ளார். "புதிய வன்முறை பதிவாகி இருக்கும் பகுதிகள் அசாம் ரைபிள்ஸ் பொறுப்பில் உள்ளது. தற்போது அப்பகுதியின் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் உள்ள 30 பழங்குடியின சமூகங்களுக்கும் மெய்த்தே சமூகத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் மே 3ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்தது. அதற்கு பிறகும் தொடரும் வன்முறையால் இதுவரை 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.