48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி: மகாராஷ்டிரா மருத்துவமனையில் பரபரப்பு
மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரத்தில் 15 குழந்தைகள் உட்பட 31 பேர் பலியாகி உள்ளனர். ஏற்கனவே 24 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மேலும் 7 நோயாளிகள் இறந்ததை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகளும் 16 பெரியவர்களும் அடங்குவர். "டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் இறப்பு தொடர்பான உண்மை விவரங்கள் பின்வருமாறு: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 1 வரை 24 இறப்புகள் பதிவாகியுள்ளன; அக்டோபர் 1 மற்றும் 2.க்கு இடையே ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளன " என்று நாந்தேட் மாவட்ட தகவல் அலுவலகம்(டிஐஓ) சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது.
மருந்துகள் பற்றாக்குறையால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
இந்த இறப்பு எண்ணிக்கை குறித்த புதுப்பிப்பை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானும் பகிர்ந்துள்ளார். மருந்துகள் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும் சிலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாகும். ஆனால் 70-80 கிமீ சுற்றளவில் உள்ள ஒரே சுகாதார மையமாக இது இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில நேரங்களில் நிறுவனத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருப்பதால்தான் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்று அந்த மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.