கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(IITs), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIMs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (NITs) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 61 மாணவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர்(33) IITகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதை தொடர்ந்து, NITகளில் 24 பேரும், IIMகளில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். 2018ஆம் ஆண்டு- 11 பேர், 2019ஆம் ஆண்டு- 16 பேர், 2020ஆம் ஆண்டு- 5 பேர், 2021ஆம் ஆண்டு- 9 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கல்வித் துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயர் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பயிலரங்குகள்
காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரத்யுத் போர்டோலோய், கௌரவ் கோகோய், பென்னி பெஹனன், கே முரளீதரன், ராஜ்மோகன் உன்னிதன், டிஎன் பிரதாபன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் தற்கொலைக்கான காரணங்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளதா என்றும் அவற்றைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் கேட்டதை அடுத்து சுபாஸ் சர்க்கார் பதிலளித்தார். "கல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம், குடும்ப காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், மனநலப் பிரச்சினைகள் போன்றவை இதுபோன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் இருக்கும் அடையாளம் காணப்பட்ட காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது." என்று சர்க்கார் நாடாளுமன்றத்தில் கூறினார். மாணவர்களை மன அழுத்ததில் இருந்து வெளி கொணர உயர் கல்வி நிறுவனங்களில் பயிலரங்குகள்/கருத்தரங்குகள் நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.