60 கிலோ எடையுள்ள சேனை கிழங்கு -அதிகளவு எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்த விவசாயி
கன்னியாகுமரி மாவட்டம், வேர்கிளம்பி கல்லங்குழி பகுதியை சேர்ந்தவர் வில்சன். 72 வயதாகும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் சேனை கிழங்கு, வாழை, தென்னை போன்ற பயிர்களை நடவு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். சேனைக்கிழங்கை அதிகளவில் நடவு செய்து அறுவடை செய்து வரும் இவர், சமீபத்தில் கேரளா விவசாயி ஒருவர் 45 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கை அறுவடை செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செய்தியை படித்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்க விரும்பிய இவர், அதிகளவில் சேனைக்கிழங்கு செடிகளை சோதனை முயற்சியாக வளர்க்க துவங்கியுள்ளார். அதனையடுத்து தற்போது வளர்ந்துள்ள ஆளுயர சேனைக்கிழங்கு செடிகளை அவர் அறுவடையும் செய்துள்ளார்.
தமிழக தோட்டக்கலை அதிகாரிகளின் உதவியை நாடும் விவசாயி
அவர் அறுவடை செய்த செடிகளுள், ஒரு செடியில் 60 கிலோ எடையுள்ள பெரியளவு சேனைக்கிழங்கும், மற்றொரு செடியில் 55 கிலோ எடையுள்ள சேனைக்கிழங்கும் கிடைத்துள்ளது. இதனால், விவசாயி வில்சன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், தான் அறுவடை செய்துள்ள பெரியளவு எடைக்கொண்ட சேனைக்கிழங்கை சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்ய தமிழக தோட்டக்கலை அதிகாரிகளின் உதவியை அவர் நாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வில்சன் தோட்டத்தில் விளைந்த, 60 கிலோ எடையுள்ள பெரியளவு சேனைக்கிழங்கை ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.