இன்னும் 5 நாட்களில் முடிவடைகிறது ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு: நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை
இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, இந்தியாவின் 2,000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30, 2023க்குப் பிறகு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழக்கும். ரூ.2,000 நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த மே 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 வரை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அப்போது காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த காலக்கெடு இன்னும் 5 நாட்களில் முடிவடையுள்ள நிலையில், உடனடியாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கான விதிமுறைகள்
தனிநபர்கள் ரூ.2,000 நோட்டுகளை வரம்புகள் ஏதுமின்றி தங்களது வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான KYC தேவைகள் மற்றும் பிற சட்டப்பூர்வ டெபாசிட் விதிமுறைகள் பின்பற்றப்படும். BSBD(அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை) அல்லது ஜன்தன் கணக்கைப் பயன்படுத்துபவர்களுக்கு, வழக்கமான வைப்பு நிதி வரம்புகள் தொடர்ந்து பின்பற்றப்படும். அதாவது, இந்தக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியாது. மேலும், வருமான வரி விதிகளின் படி(விதி 114B), ஒரு தனிநபர், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரே நாளில் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்யும்போது அவர்களின் பான் நம்பரை அவர்கள் வழங்க வேண்டும்.
ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான விதிமுறைகள்
செப்டம்பர் 30ஆம் தேதி வரை, ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில்(ROs) தனிநபர்கள் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அருகில் உள்ள எந்த வங்கிக் கிளையிலும் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை தனிநபர்கள் மாற்றிக்கொள்ளலாம். ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லும் என்பதால், அதுவரை எந்த ஒரு ஆவணமும், செல்லானும் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற முடியும். இருப்பினும், சில பொதுத்துறை வங்கிகள் வேறுபட்ட அணுகுமுறையை செயல்படுத்தியுள்ளன. அதனால், வங்கிக்கு செல்லும் போது அடையாள சான்றுகளை கையில் வைத்திருப்பது நல்லது.
இந்த வார வங்கி விடுமுறை நாட்கள்
இந்த வாரம் வங்கிகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை(செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 27 வரை) திறந்திருக்கும். செப்டம்பர் 28, வியாழன் அன்று, மிலாடி நபியை முன்னிட்டு வங்கிகள் இயங்காது. அதன் பிறகு, வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்(செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30) வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். அதனால், இந்த வார வியாழக்கிழமையை தவிர மற்ற நாட்களில் நீங்கள் வங்கிக்கு சென்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.