LOADING...
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் ஊரடங்கு: 4 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் மீண்டும் ஊரடங்கு: 4 பேர் சுட்டுக் கொலை

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2024
09:20 am

செய்தி முன்னோட்டம்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் புதிய வன்முறை வெடித்ததை அடுத்து, மணிப்பூர் அரசு நேற்று தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம நபர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நேற்று மாலை மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வன்முறையைத் தொடர்ந்து, தௌபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பிஜியூக்

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு

"மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாலும், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர், உடைமை சேதங்களை தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2023 டிசம்பர் 31 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது" என்று இம்பால் மேற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங், லிலாங்கில் வசிக்கும் மக்கள் இனி எந்த வன்முறையையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும், அப்பகுதியில் அமைதியைப் பேணுமாறும் கேட்டுக் கொண்டார்.