2 மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு: 4 பேர் கைது
இரண்டு மணிப்பூர்-மெய்தே மாணவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினர்(சிபிஐ) தடுத்து வைக்கத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர். அது தவிர, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இரு சிறுமிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 3ஆம் தேதி இன வன்முறை தொடங்கிய மலை மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து இந்த சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். சுராசந்த்பூர், மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிமீ தொலைவில் உள்ளது.
கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய 2 மணிப்பூர்-மெய்தே மாணவர்களின் புகைப்படங்கள்
ஜூலை 6 ஆம் தேதி பிஷ்ணுபூர் அருகே காணாமல் போன இரண்டு மெய்தே மாணவர்களது சடலங்களின் புகைப்படங்கள், கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் மொபைல் சேவை மீண்டும் துவங்கியதும், வைரலான இந்த புகைப்படங்களில், மாணவர்களின் பின்னணியில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நிற்பது போலவும், அந்த மாணவர்கள் ஆதரவற்ற நிலையில் அமர்ந்திருப்பது போலவும் இருந்தது. மற்றொரு படத்தில், அவர்கள் கொலை செய்யப்பட்டது போல அவர்களது சடலங்கள் படம் பிடிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு காட்டுப் பகுதியில் அவர்களின் உடல்கள் கிடப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த வாரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.