ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது
கடந்த 14ஆம் தேதி கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுன்யா சிறையில் அடைத்தனர். அப்போது தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளும் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அந்த 27 மீனவர்களையும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் விடுவிக்கவில்லை என்றால், நவம்பர் 1ஆம் தேதி முதல் மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், அதன் பின், கைது செய்யப்பட்ட 15 மீனவர்களுக்கு நவம்பர் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது. இதனையடுத்து, திட்டமிட்டபடி கண்டிப்பாக ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என்று மீனவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இரண்டு குழுக்களை சேர்ந்த 37 மீனவர்கள் கைது
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் தலைமன்னார் மற்றும் கச்சத்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 படகையும் கைப்பற்றினர். இது நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த பதட்டம் குறையாத நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட அந்த மீனவர்களின் படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் 14 பேரையும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.