பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை
பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் இன்று(ஜூலை 23) சிவம் என்ற ஒரு மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தையை மீட்க NDRF மற்றும் பிற மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. "குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. குழந்தையை மீட்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம். NDRF மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குழந்தை இன்னும் உயிருடன் தான் இருக்கிறது. குழந்தையின் குரல் எங்களுக்கு கேட்கிறது" என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். சிவத்தின் தாயார், வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.
இதுபோன்ற சம்பவங்கள் மிக சாதரணமாக நாடு முழுவதும் நடந்து வருகிறது
ஆழ்துளையில் இருந்து குழந்தையை மீட்கவும், குழந்தைக்கு ஆக்ஸிஜன் வழங்கவும் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கையை பாதுகாப்பாகவும் திறம்படவும் செய்வதற்காக அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய மருத்துவக் குழுக்களும் சம்பவ இடத்தில் உள்ளன. ஒரு விவசாயி அந்த ஆழ்துளையை தோண்டி இருக்கிறார். ஆனால், நினைத்த அளவு அது வெற்றிகரமாக முடியவில்லை. எனவே, இந்த ஆழ்துளை கிணற்றின் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்றும், அதற்கு பிறகு அந்த ஆழ்துளையை யாரும் மூடவில்லை என்றும் மீட்பு பணியை மேற்பார்வை செய்யும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மிக சாதரணமாக நாடு முழுவதும் நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.