இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க 17வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய இன்னும் 3 மீட்டர்களே உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர்களை ஏற்றி செல்வதற்கான ஆம்புலன்களும் ஸ்ட்ரெச்சர்களும் உள்ளே கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த 3 மீட்டர்களையும் வெற்றிகரமாக கடந்துவிட்டால், இன்னும் சில மணி நேரத்திற்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி சில்க்யாரா சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போதிலிருந்து 17 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அந்த சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
மீட்பு பணிகளில் ஏற்பட்ட தடங்கல்கள்
சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஒரு குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 55.3 மீட்டர் கிடைமட்ட துளையிடும் பணி முடிந்துள்ளது. இந்த துளையிடும் பனியின் போது, பல முறை தோண்டப்பட்ட குழிகள் மீண்டும் மீண்டும் விழுந்தது. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட ட்ரில்லிங் இயந்திரம் உட்பட இரண்டுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் தொடர்ந்து சேதமடைந்தன. அது போக, 4 டிகிரி செல்சிஸுக்கும் குறைவான குளிரும் மழையும் மீட்பு பணிகளை பெரிய அளவில் பாதித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல், மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலைக்குள் இந்த மீட்பு பணிகள் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.