பீகாரில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் - அதிரடி நடவடிக்கை
பீகார் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 3 லட்ச பள்ளி மாணவ-மாணவியர்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது. பீகார் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த 15 நாட்களுக்கு மேல் எவ்வித முன்னறிவிப்பு மற்றும் காரணமும் இல்லாமல் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால் அதற்கு உரியமுறையில் பெற்றோர்கள் கடிதம் எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி விடுமுறை எடுத்த மாணவர்களுள் பலரது பெற்றோர் விடுமுறைக்கான காரணங்களை குறிப்பிட்டு கடிதம் எழுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
3 நாட்கள் விடுமுறை எடுத்தால் பள்ளி நிர்வாகத்திடம் தகவலளிக்க வேண்டும்
எனினும், இதனுள் சுமார் 3 லட்சத்து 32 ஆயிரத்தி மாணவர்களின் பெற்றோர் விடுமுறை கடிதம் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் தான் அம்மாநில அரசு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து கல்வித்துறை, 4ம் வகுப்பு மாணவர்கள் 46,000 பேர், 5ம் வகுப்பு மாணவர்கள் 44,000 பேர், 6ம்-வகுப்பு மாணவர்கள் 39 ஆயிரம் பேர் மற்றும் மற்ற வகுப்புகளை சேர்ந்தவர்களும் நீக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே அண்மையில் தான் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 75% வருகைப்பதிவினை பெற்றிருக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது. அதேபோல் பள்ளிக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் தகுந்த காரணத்தினை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.