உத்தரகாண்டில் கனமழை: கேதார்நாத் நடைபயணம் செல்லும் பாதையில் பாறைகள் மோதியதில் 3 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மலையேற்றப் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இச்சம்பவம் இன்று கவுரி குண்ட் அருகே நடந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் உத்தரகாண்ட் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். "கேதார்நாத் யாத்ரா வழித்தடத்தில் மலையில் இருந்து விழுந்த கனரக கற்கள் காரணமாக சில யாத்ரீகர்கள் காயமடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. நான் தொடர்ந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். " என்று தாமி கூறியுள்ளார்
கனமழையால் தொடரும் நிலச்சரிவுகள்
"விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறந்த சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.அவர்களது ஆன்மாக்களுக்கு தனது காலடியில் இடம் தந்து இந்த துயரத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்குவானாக" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இடைவிடாத மழையைத் தொடர்ந்து, ஜூலை 19 அன்று, தனக்பூர் சம்பவத் தேசிய நெடுஞ்சாலை, நிலச்சரிவால் தடைபட்டது. அதற்கு முன்னதாக ஜூலை 10ஆம் தேதி, பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் படால் கங்கா லாங்சி சுரங்கப்பாதை அருகே மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை தடைப்பட்டது. மேலும், ஜோஷிமத் அருகே பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.