மகாதேவ் சூதாட்ட செயலி உட்பட 22 சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் முடக்கம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இயங்கி வந்த மகாதேவ் சூதாட்ட செயலி உட்பட 22 சட்டவிரோத சூதாட்ட செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் முடக்க ஆணை பிறப்பித்திருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். சத்தீஸ்கரில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட கூட்டமைப்பு குறித்து விசாரணை செய்து வந்த அமலாக்கத் துறையினர், மகாதேவ் புக் நிறுவனம் மீது சோதனையும் நடத்தியிருக்கின்றனர். இந்த விசாரணையில் அந்நிறுவனமாது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டதையடுத்து, அதன் சூதாட்ட செயலியை முடக்க ஆணை பிறப்பித்ததோடு, பிம் சிங் யாதவ் மற்றும் அசிம் தாஸ் ஆகிய இருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
சத்தீஸ்கர் முதல்வர் மீது குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை:
"சத்தீஸ்கரில் இயங்கி வந்த இந்த சூதாட்ட செயலி மற்றும் வலைத்தளத்தை முடக்குவதற்காக அனைத்து அதிகாரங்களும் சத்தீஸ்கர் அரசுக்கு இருந்து, அம்மாநில அரசு அதனை செய்யவில்லை. கடந்த 1.5 ஆண்டுகளாக விசாரணை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அமலாக்கத்துறையினருக்குக் கிடைத்த முதல் தகவலையடுத்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது" எனத் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர். மகாதேவ் சூதாட்ட செயலியிடமிருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ரூ.508 கோடி வரை பணம் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது அமலாக்கத்துறை. மேலும், அது குறித்து இன்னும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.