சென்னையில் உருவெடுக்கும் 20 மாடி குடியிருப்பு கட்டிடங்கள்
தமிழ்நாடு மாநிலத்தில், சென்னையில் காலிமனைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்கள் 20 தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். சென்னையில் கடந்த 1959ம்ஆண்டில் கட்டப்பட்ட 14 தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.அலுவலகமே உயரமான கட்டிடம் என இருந்து வந்த நிலையில் 2008ம் ஆண்டு கட்டுமான திட்டங்களில் உயர வரையறையானது தளர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்தே சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், சென்னைக்கு வெளியில் பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர் உள்ளிட்ட இடங்களில் அதிக உயரம் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதுகுறித்து கட்டுமான துறையினர் கூறுகையில், அப்பாசாமி ரியல் எஸ்டேட் சார்பில் சென்னையின் எல்லையான கொட்டிவாக்கத்தில் 636 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது என்று கூறினர்.
விமானநிலையம் ஒட்டிய பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு உயரக்கட்டுப்பாடு
மேலும் அவர்கள், கட்டப்படுவதில் 2 கட்டிடங்கள் 20 தளங்கள் கொண்டது. ஒரு கட்டிடம் 39 மாடிகள் வரை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் கொட்டிவாக்கத்தில் 198 வீடுகள் கொண்ட 21 அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும் கிண்டி ராஜ்பவன் அருகில் 20 மாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்காக கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்திடம் 5.56ஏக்கர் நிலத்தினை ரூ.360கோடிக்கு இந்நிறுவனம் வாங்கியுள்ளது என்று கூறியுள்ளனர். விமானநிலையத்தின் ஆணையம் தடையின்மை சான்று கொடுத்தால் இப்பகுதியில் அடுக்குமாடு கட்டிடம் கட்டுவதில் சிக்கல்வராது. ஏனெனில் விமானநிலையம் ஒட்டிய பகுதிகளில் கட்டுமான திட்டங்களுக்கு உயரக்கட்டுப்பாடு உள்ளது என்று நகரமைப்பு வல்லுநர்கள் கூறியுள்ளனர். சென்னை நகர எல்லைக்குள் எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக கோயம்பேட்டில் ஹரியந்த் டவர்ஸ் 1999ம்ஆண்டு 17 தளங்கள் கொண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.