கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதால் மகள்களை இழந்ததாக 2 இந்திய குடும்பங்கள் சீரம் இன்ஸ்டிடியூட் மீது வழக்கு
கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு இறந்ததாகக் கூறப்படும் இரண்டு இந்தியப் பெண்களின் பெற்றோர்கள், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். இந்த தடுப்பூசியை உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், தங்கள் தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று UK நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர். அஸ்ட்ராஜெனெகாவின் இந்த வாக்குமூலத்தினால், தங்கள் மகள்களின் மரணத்திற்காக நீதி கிடைக்கும் என்று அந்த பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த கோவிட்-19 தடுப்பூசியானது TTS - த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறி அரிதாக உண்டாக்கும் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியால் மரணமடைந்த மகள்கள்
18 வயதான ரித்தாயிகா ஸ்ரீ ஓம்ட்ரி, 2021 இல் கோவிஷீல்டின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். ஆனால், தடுப்பூசி செலுத்திய 7 நாட்களுக்குள், ரித்தாய்காவுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுக்கத் தொடங்கினார். அதன் பின்னர் அவரால் நடக்க முடியவில்லை. தொடர்ந்து MRI ஸ்கேன் எடுக்கப்பட்டது. அது அவரது மூளையில் பல இரத்தக் கட்டிகள் மற்றும் இரத்தப்போக்கு இருப்பதைக் காட்டியது. இரண்டு வாரங்களில், ரித்தாயிகா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ரித்தாய்காவின் இறப்புக்கான சரியான காரணம் அப்போது ரிதாய்காவின் பெற்றோருக்குத் தெரியவில்லை. ஆனால் இரண்டு ஆர்டிஐகள் பின்னர், டிசம்பரில், மத்திய சுகாதார அமைச்சகம் ரித்தாய்கா "த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசிட்டோபீனியா சிண்ட்ரோம்" நோயால் பாதிக்கப்பட்டு "தடுப்பூசி காரணமாக இறந்துவிட்டாள்" என்பதை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு விளக்கம் கிடைத்தது.