புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் புதிய விமானநிலைய வளாகம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் விமான சேவைகளும் துவங்கியது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானசேவை துவங்கப்பட்ட நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக அந்த விமான சேவைகள் 2014ம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து மீண்டும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான சேவைகள் துவங்கப்பட்டது. இதுவும் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் அதே வருடம் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத்திற்கும், பெங்களூருவுக்கும் விமானங்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் உதான் திட்டம்
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் விரைவில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான மாதிரி சிறிய ரக விமானம் புதுச்சேரி வந்த நிலையில், பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் தேனி விஜயகுமார் உள்ளிட்டோர் அவ்விமானத்தை ஆய்வு செய்தனர். இது குறித்து சிறு விமான சேவையை துவங்கும் தனியார் நிறுவன சிஇஓ சதீஷ்குமார் பேசுகையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் 19 இருக்கைகள் கொண்ட விமான சேவையினை சிறிய நகரங்களை இணைக்க துவங்கவுள்ளோம். அதனை காட்சிப்படுத்தவே புதுச்சேரிக்கு எடுத்து வந்தோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்த விமானத்தை செக் குடியரசில் வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்