Page Loader
உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி
பலர் இதனால் காயமடைந்துள்ளனர்.

உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jul 19, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் மின்மாற்றி வெடித்ததால் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் இன்று(ஜூலை 19) உயிரிழந்தனர். மேலும், பலர் இதனால் காயமடைந்துள்ளனர். நமாமி கங்கை திட்ட தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மின்மாற்றி வெடித்து சிதறியதால், பாதிக்கப்பட்டவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். "ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படையினர் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் மின்னோட்டம் இருந்தது என்பது முதல்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று உத்தரகாண்ட் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

சிஜி

நீதித்துறை விசாரணைக்கு உத்தரகாண்ட் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகாண்டின் பிப்பல்கோட்டிக்கு பொறுப்பான புறக்காவல் நிலைய அதிகாரியும் இந்த விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். காவல்துறை, SDRF மற்றும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது." என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.