வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15.33 லட்சம் பேர் விண்ணப்பம் - சத்ய பிரதா சாகு தகவல்
இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறுகையில், "தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை வாக்காளர் பட்டியல்களில் புதிதாக பெயர் சேர்க்க 9,13,535 பேரும், பெயரினை நீக்க 1,21,046 பேரும், முகவரி மாற்றம் செய்ய 4,99,302 பேரும் விண்ணப்பித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது
இதன்படி மொத்தமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 15,33,955 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிறப்பு முகாம் வரும் டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் நடக்கும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும் என்றும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 27ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்தே இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் 3,000 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.