லக்னோ: வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, 14 வயது மாணவன் மாரடைப்பால் மரணம்
லக்னோவின் அலிகஞ்சில் உள்ள சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் அதிஃப் சித்திக் என்ற மாணவன் கடந்த புதன்கிழமை தனது வகுப்பறையில் படித்துக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தான். இந்த செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. புதன்கிழமை அன்று, பள்ளியில் வேதியியல் வகுப்பின்போது, சித்திக் தனியாகப் படித்துக் கொண்டிருந்தான். அவன் அருகிலேயே ஆசிரியர் நதீம் கான் மற்றொரு மாணவருக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொண்டிருந்துள்ளார். அப்போது சித்திக் திடீரென சுருண்டு விழுந்ததையடுத்து மாணவர்கள் அலறியடித்தனர். ஆசிரியர் கான், சித்திக்கிற்கு முதலுதவி செய்து, CPR செய்யவும் முயற்சித்துள்ளார். ஆனால் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, ஆசிரியரும், பள்ளி செவிலியரும் சித்திக்கை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்தியர்களை அதிகம் தாக்கும் இதய நோய்
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் தான், சித்திக், தனது 14வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் என்பது மேலும் ஒரு சோகமான விஷயம். பிரேத பரிசோதனை அறிக்கை மூலமே சித்திக் மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படும் என்று அந்த மருத்துவமனையின் இருதயவியல் துறையைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்தார். இறந்து போன மாணவன் சித்திக்கிற்கு ,அயன் என்ற இரட்டை சகோதரர் மற்றும் அரீபா மற்றும் அருஷா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். உலகிலுள்ள மற்ற மக்களை விட, 5-10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்களை இதய நோய்கள் தாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது