
அரிவாளால் சகமாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது சக மாணவனை அரிவாளால் வெட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாணவன் தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
ஒரு சிறிய பென்சிலுக்கான தொடங்கிய வாக்குவாதம், அரிவாள் வெட்டு வரை கொண்டு சென்ற சம்பவம் பெற்றோர்களிடத்தில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம்
பள்ளிவளாகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
நேற்று காலை 10.30 மணியளவில் ஆசிரியர்கள் தேர்வுக்கான தயார் வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் 8ஆம் வகுப்பின் ஒரு மாணவன், தன் புத்தகப்பையிலிருந்து அரிவாளை எடுத்துச் சரமாரியாக முன்பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவனை தலை, தோள்பட்டை மற்றும் இரண்டு கைகளில் வெட்டினார்.
சம்பவத்தை பார்த்த ஆசிரியை ரேவதி மாணவனை பாதுகாக்க ஓடி வந்தார். மாணவனை தடுக்க முயன்ற போது, அவருக்கும் இரு கைகளிலும் வெட்டு காயம் ஏற்பட்டது.
தாக்கிய மாணவன் அதனைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி, அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கே நடந்தே சென்று சரணடைந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விவகாரம்
2 மாதங்களுக்கு முன்னர் பென்சில் சண்டையால் ஏற்பட்ட பகையுணர்வு
இது தொடர்பான போலீஸ் விசாரணையில், முன்னதாக ஏற்பட்ட சிறிய தகராறை மனதில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிந்துள்ளது.
2 மாதங்களுக்கு முன்பு, பென்சில் யாருடையது என்பதைப் பற்றிய சிறிய சண்டை இந்த இரண்டு மாணவர்களுக்குள் ஏற்பட்டது.
இது குறித்து இரு தரப்பு பெற்றோர்களையும் ஆசிரியர்கள் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, வகுப்பாசிரியர் அந்த இரு மாணவர்களையும் வெவ்வேறு இடங்களில் அமர வைத்து பிரித்திருந்தார்.
இந்நிலையில், மாணவன் அந்த நிகழ்வை மனதில் வைத்துக்கொண்டு, நேற்று தனது பையில் அரிவாளை கொண்டு வந்து, வகுப்பின் போது முன் பெஞ்சில் இருந்த சக மாணவனை வெட்டியதாக போலீசாருக்கு விசாரணையில் தெரிவித்துள்ளான்.
நீதிமன்ற காவல்
14 நாட்கள் சிறுவர் சீர்திருத்தக் கூடத்தில் காவல் மற்றும் கவுன்சிலிங்
அரிவாளால் தாக்கிய மாணவனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி, அவரை 14 நாட்கள் சிறுவர் சீர்திருத்தக் கூடத்தில் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாணவனுக்கு தகுதியான நபர்க மூலமாக மனநல ஆலோசனை(கவுன்சிலிங்) வழங்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்து, பாதுகாப்பில் தவறுகள் ஏற்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.