துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பணிக்காகத் துருக்கிக்கு சென்ற இந்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் இன்று(பிப் 8) தெரிவித்துள்ளது. 10 இந்தியர்கள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் சிக்கிக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தற்போது துருக்கியில் 3,000 இந்தியர்கள் இருக்கின்றனர் என்றும் வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "துருக்கியின் அதானாவில் நாங்கள் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளோம். 10 இந்தியர்கள் பாதிக்கப்பட்ட இடங்களின் தொலைதூர பகுதிகளில் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். வணிக பயணத்திற்கு வந்த இந்தியர் ஒருவரைக் காணவில்லை. நாங்கள் அவரது குடும்பத்தினருடனும் பெங்களூரில் இருக்கும் அவரது நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கிறோம்." என்று மேற்கு செயலாளர் சஞ்சய் வர்மா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் ஆபரேஷன் தோஸ்த்தின் மூலம் உதவி
இந்தியா, சிரியாவிற்கு தேவையான மீட்பு பொருட்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வருவதாகவும், துருக்கிக்கு 'ஆபரேஷன் தோஸ்த்' திட்டத்தின் கீழ் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 11,000க்கும் மேற்பட்ட மக்களை இடிபாடுகளுக்குள் தேடும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாடுகளுக்கு பல உலக நாடுகளில் இருந்து உதவிகள் வரத் தொடங்கியுள்ளன. "#OperationDostன் கீழ், மீட்புக் குழுக்கள், கள மருத்துவமனை(மருந்துகள் நிறைந்த பெட்டி), மருந்துகள் மற்றும் உபகரணங்களை துருக்கிக்கும் சிரியாவுக்கும் இந்தியா அனுப்பி வருகிறது." என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மீட்பு பணிகளில் உதவ இந்த படைகள் அனுப்பப்பட்டுள்ளன.