தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 1,500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு: மா.சுப்பிரமணியம்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று(அக்.,19) உலக விபத்து தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கலந்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் உரையாற்றியுள்ளார். அவர் பேசியதாவது, "டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு கடந்த ஜனவரியிலிருந்து இப்போதுவரை 5,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 531 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். மேலும், 'வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 1000-1500 வரையிலான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என்றும் கூறினார். தொடர்ந்து அவர். 'இன்னுயிர் காப்போம்' திட்டம் மூலம் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் பாதியாக குறைந்துள்ளது என்றும் கூறியதாக தெரிகிறது.
'திருப்தி' என்னும் உதவி திட்டத்தினை துவக்கி வைத்தார்
மேலும், 'உலக விபத்து தினத்தினை அனுசரிக்கும் விதமாக சென்னை முதலுதவி பயிற்சிகள் சட்டக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது' என்றும், 'அக்.,11ம் தேதி முதல் அக்.,31ம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணவர்வு ஏற்படுத்தும் வகையில் 40வயதுக்கு மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், பெண்கள் மற்றும் செவிலியர்களுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது' என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர், ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு சார்பில் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளிகளோடு தங்கியிருக்கும் 500 பேருக்கு தினமும் மதியம் உணவு வழங்கும் 'திருப்தி' திட்டத்தினை துவக்கி வைத்து, விரைவில் இதன் எண்ணிக்கை 2000-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.