மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்; விண்ணப்பிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்த மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விண்ணப்பங்களை வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 24ஆம் தேதி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். இதையடுத்து விண்ணப்ப பதிவை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்ட அரசு, முதற்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை 20,765 ரேஷன் கடைகளில் முகாமை நடத்தியது. இந்த முகாமில் இருந்து மொத்தம் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இரண்டாம் கட்ட முகாமில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள்
முதற்கட்ட முகாமிற்கு பிறகு, இரண்டாம் கட்டமாக எஞ்சியுள்ள பகுதிகளில் 05.08.2023 அன்று தொடங்கி 16.08.2023 வரை விண்ணப்ப முகாம்கள் நடந்து வருகிறது. இதில் தற்போதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் காலம் இருப்பதால் கூடுதல் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இரண்டு முகாம்களிலும் இதுவரை வந்துள்ள விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க நேரடி கள ஆய்வை தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கள ஆய்வின் மூலம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை மட்டும் தேர்வு செய்து மகளிர் உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.08.2023 மற்றும் 20.08.2023 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.