LOADING...
விஸ்வரூபம் எடுக்கும் விஜய் டிவியின் "நீயா நானா" நிகழ்ச்சி; தொடர்ந்து எழும் விமர்சனங்கள்
சமீபத்திய எபிசோட், தெருநாய்கள் தொடர்பான தலைப்பை மையமாகக் கொண்டது

விஸ்வரூபம் எடுக்கும் விஜய் டிவியின் "நீயா நானா" நிகழ்ச்சி; தொடர்ந்து எழும் விமர்சனங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
06:21 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் டிவியின் பிரபலமான விவாத நிகழ்ச்சியான "நீயா நானா"-வின் சமீபத்திய எபிசோட், தெருநாய்கள் தொடர்பான தலைப்பை மையமாகக் கொண்டது. தற்போது நாடு முழுவதும் தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த எபிசோட் பயங்கர எதிர்பார்ப்பை தூண்டியது. அது ஒளிபரப்பான பின்னர், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அந்த நிகழ்ச்சியை நீக்க வேண்டும் என தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் கவுரவ உறுப்பினர் ஸ்ருதி வினோத்ராஜ், விஜய் டிவிக்கு எழுதிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு

காரசாரமாக நடைபெற்ற விவாதம்

இந்த நிகழ்ச்சியில் படவா கோபி, நடிகை அம்மு உள்ளிட்டோர் தெருநாய்களுக்கு ஆதரவாகப் பேசினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான, விஜய் டிவி கோபிநாத், தெருநாய்கள் மக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் கூர்மையான கேள்விகளை எழுப்பினார். "நாய்க்கு சரணாலயம் வேண்டும் என்கிறீர்கள், ஆனா என் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்கு உரிமை இல்லையா?" உள்ளிட்ட பல கேள்விகளை அவர் கேட்டார். இருந்தாலும், 8 மணி நேரம் ஷூட் செய்யப்பட்ட மொத்த நிகழ்ச்சியும் TRP-காக எடிட் செய்யப்பட்டு தங்கள் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக 'படவா' கோபி மற்றும் அம்மு தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

குற்றச்சாட்டு

நிகழ்ச்சி எடிட் செய்தது குறித்து படவா கோபி காட்டம்

"நான் பேசியவற்றை சரியாக காட்டாமல், எடிட் செய்து பொதுமக்களுக்கு எதிரியாக சித்தரித்துவிட்டார்கள். என் வீட்டு நாய் பற்றிப் பேசியதை முழுமையாக நீக்கிவிட்டார்கள்," என்றும், "நான் பேசியது யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்" என்றும் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். சின்னத்திரை நடிகை அம்முவும், 'சரியாக எடிட் செய்யாமல், TRP காக இதனை கீழ்தரமாகவா நடந்து கொள்வார்கள்? தைரியமாக அந்த 8 மணி நேர வீடியோவை ஒளிபரப்புங்கள். அப்போதுதான் மக்களுக்கு உண்மை தெரியும்" என கொந்தளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.