பிறந்தநாள் ஸ்பெஷல்: விஜய் சேதுபதியின் திரைப்பயணம் பற்றிய சிறு தொகுப்பு
விஜய் குருநாத சேதுபதியாக, ராஜபாளையத்தில் பிறந்த 'மக்கள் செல்வன்', தனது திரை பயணத்திற்காக விஜய் சேதுபதி என தனது பெயரை சுருக்கி கொண்டார். கமல் நடிப்பில் வெளி வந்த நம்மவர் திரைப்படத்தின் ஆடிஷனிற்கு தனது 16 வயதில் சென்றுள்ளார். அதுவே அவரது பயணத்தின் ஆரம்பப்புள்ளி என கருதலாம். துபாய் வேலையை உதறி விட்டு, சென்னை வந்த சேதுபதி, கூத்துப்பட்டறையில் சேர்ந்து முறையான நடிப்பு பயிற்சியை மேற்கொண்டார். கார்த்திக் சுப்புராஜின் குறும்படங்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அவரின் நடிப்பு, புதுப்பேட்டை, லீ, நான் மஹான் அல்ல போன்ற படங்களில் சிறு வேடங்களை வாங்கி தந்தது. எனினும், தேசிய விருது பெற்ற 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படமே, அவர் திரையுலகில் அழுந்த கால் பாதிக்க உதவியது.
நடிப்பில் வித்தியாசங்களை காட்டும் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, முதன் முறையாக வில்லனாக நடித்த படம் சுந்தரபாண்டியன். மற்ற ஹீரோக்கள் நடிக்க தயங்கும் துணை நடிகர் வேடம், மல்டி ஹீரோ சப்ஜெக்ட் என எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சேதுபதி, ஜூங்கா, முகிழ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்கு தேசிய விருது வென்றார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர், முத்தையா முரளீதரன் பயோபிகில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. தற்போது, ஹிந்தி படவுலகிலும் கால் பதித்துள்ளார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி.