LOADING...
உச்ச நீதிமன்றம் செல்லும் ஜனநாயகன்; பொங்கல் ரிலீஸ் சந்தேகம்? விஜயின் கடைசிப் படத்திற்குத் தொடரும் முட்டுக்கட்டைகள்
ஜனநாயகன் படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

உச்ச நீதிமன்றம் செல்லும் ஜனநாயகன்; பொங்கல் ரிலீஸ் சந்தேகம்? விஜயின் கடைசிப் படத்திற்குத் தொடரும் முட்டுக்கட்டைகள்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 09, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜயின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் அடுத்தடுத்து சிக்கல்கள் நீடிப்பதால், தற்போது இந்தப் பட விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து நிலவும் சட்டச் சிக்கல்களால், படக்குழுவினர் தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும், படத்தை எவ்வித தணிக்கைத் தடையும் இன்றி வெளியிடவும் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தாலும், தணிக்கை வாரியம் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி படத்தை வெளியிட தடை விதித்து வழக்கை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார்.

ஆலோசனை

படக்குழு ஆலோசனை

உயர் நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்ப்பில் எதிர்பார்த்த முழுமையான தீர்வு கிடைக்காததால், ஜனநாயகன் தயாரிப்பாளர்கள் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கைச் சிக்கல்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகக் காத்திருந்த விஜய் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். "தலைவரின் கடைசிப் படம்; இதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்?" எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

சனிக்கிழமை அல்லது திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக இதனை முறையிடப் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் படத்திற்கு இடைக்காலத் தடை எதையும் விதிக்காமல், முழுமையான அனுமதியை வழங்கினால் மட்டுமே பொங்கல் வார இறுதியில் அல்லது அதற்கு அடுத்த சில நாட்களில் திரைப்படம் வெளியாகும். இதற்கிடையே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் படத்தை வெளியிட முடியாவிட்டால், படம் 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement