லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், புதுக்கோட்டையில் திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படும் போது திருமணம் செய்து ஒரு தம்பதி கவனம் ஈர்த்துள்ளனர். விஜய் ரசிகரான வெங்கடேசும், மணமகள் மஞ்சுளாவும் லியோ திரைப்படத்தில் முதல் காட்சி வரும்போது, மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். புதுவை நகர்மன்ற உறுப்பினரும், விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளமான பர்வேஸ் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு நாளை பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் மதமான கிறிஸ்தவ முறைப்படி, மோதிரம் மாற்றி திரையரங்கில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.