உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் 82 வது பிறந்தநாள் இன்று!
'என் இனிய தமிழ் மக்களே' என டைட்டில் கார்டில் துவங்கி தனது முத்திரையை பதித்தவர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா. இவர் தனது 82வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். 1941ஆம் ஆண்டு, ஜூலை 17ஆம் தேதி தேனி மாவட்டத்தில் அல்லிநகரம் என்ற ஊரில் பிறந்த இவர், சிறு வயது முதலே கலைத்துறையில் மீது தீராக்காதல் கொண்டிருந்தார். அதன் விளைவாக, அரசாங்க வேலையை உதறிவிட்டு, கோடம்பாக்கத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கினார். ஆனால், எடுத்ததும் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து, படிப்படியாக முன்னேறி, தற்போது இயக்கத்தில் உச்சத்தை தொட்டுள்ளார். இது வரை 6 தேசிய விருதுகள், 4 பிலிம்ஃபேர் விருதுகள், மாநில விருது மற்றும் நந்தி விருதும் வென்றுள்ளார்.
இயக்கம் மட்டுமின்றி, தற்போது நடிப்பிலும் கலக்கும் பாரதிராஜா!
ஆயுத எழுத்து: பழுத்த அரசியல்வாதியாக, இளம் தலைமுறையினரின் எழுச்சியையும், புரட்சிகளையும் எதிர்க்கும் வில்லன் செல்வநாயகமாக கலக்கியிருப்பார் பாரதிராஜா. பாண்டிய நாடு: விஷால், சமுத்திரக்கனி என இளம் தலைமுறை நடிகர்களுடன் நடித்திருந்தார் பாரதிராஜா. தானுடைய பாசமிகு மகன், ஒரு கொலைகாரன் என்பதை அறிந்து குமுறும் இடத்திலும், அவனை நியாயமான முறையில் தண்டிக்க வேண்டும் என உறுதியெடுக்கும் இடத்திலும், "இவர் சூப்பர் நடிகரப்பா!" என சொல்ல வைத்தார். ரெட்டைசுழி: பெரும் இயக்குனர்கள் பாரதிராஜாவும், பாலசந்தரும் நடித்திருந்த இந்த திரைப்படம், வணிகரீதியாக வெற்றியடையவில்லை என்றாலும், இவர்களின் நடிப்பு பாராட்டப்பட்டது. திருச்சிற்றம்பலம்: இந்த படத்தை தாங்கி நின்ற தூணாக பாரதிராஜா இருந்தார் எனக்கூறலாம். அவ்வளவு எதார்த்த நடிப்பு. இப்படி ஒரு தாத்தா நமக்கிலையே என பலரையும் ஏங்க வைத்தார்.