மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் அஞ்சலி!
செய்தி முன்னோட்டம்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் மூத்த நடிகையாக விளங்கிய சௌகார் ஜானகி (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இச்சம்பவம் தென்னிந்தியத் திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ICU-வில் சிகிச்சை பெற்று வந்த சௌகார் ஜானகி, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:59 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புகழ்பெற்ற நட்சத்திரமான சௌகார் ஜானகி (94) காலமானார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செனடாப் சாலையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
கலைப்பயணம்
கலைப்பயணத்தின் சிறப்பம்சங்கள்
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகி, ஆகாசவாணி சென்னை வானொலியில் ஆர்.ஜே-வாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
1950-இல் எல்.வி. பிரசாத் இயக்கத்தில் வெளியான 'ஷாவுகாரு' என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'சௌகார்' ஜானகி என அழைக்கப்பட்டார்.
1952-இல் 'வளையாபதி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
1959-இல் டாக்டர் ராஜ்குமாருடன் இணைந்து கன்னட திரையுலகின் முதல் பான்-இந்திய திரைப்படமான 'மகிஷாசுர மர்தினி'யில் நடித்தார்.
2020-இல் தமிழில் 'பிஸ்கோத்' திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த சௌகார் ஜானகியின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.