8.5 ஆண்டுகளுக்கு பிறகு: மலையாள நடிகர் திலீப் மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைக்கு பிறகு, இன்று எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி, பிரபல தென்னிந்திய நடிகை ஒருவர் கொச்சிக்கு அருகில் காரில் கடத்தப்பட்டு, ஓடும் காருக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், இந்தச் சம்பவத்தை குற்றவாளிகள் வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். நடிகையை கடத்தி தாக்குவதற்கு அவர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னணி
தாக்குதலுக்கான காரணம் என காவல்துறை கூறுவது என்ன?
நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம், அந்த பாதிக்கப்பட்ட நடிகை திலீப்பின் கள்ளக்காதல் விவகாரம் குறித்து தெரிவித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகையும், மஞ்சு வாரியரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் பிரதான குற்றவாளியான 'பல்சர் சுனி' உட்பட மொத்தம் 10 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பல சுற்று சட்டப் போராட்டங்களையும், விசாரணை அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக புதிய வழக்குப் பதிவுகளையும் சந்தித்தது. இந்த வழக்கின் வெளிச்சத்தில்தான் மலையாள திரைத்துறையில் பெண்களுக்கான தனி அமைப்பு ஒன்று உருவானது.