சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' குறித்த அப்டேட்
'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனரான ஞானவேல் இயக்குகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டது. 'ஜெயிலர்' படத்தை போலவே, இந்த திரைப்படத்திலும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் துவங்கும் இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், 'ஜெய்பீம்' படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் போல் இதிலும் ரஜினியின் கதாபாத்திரம் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்னும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.