கருமுட்டைகளை சேமித்து வைத்த பிரபல தெலுங்கு நடிகரின் மனைவி
ஆஸ்கார் விருது வென்ற RRR திரைப்படத்தின் மூலம், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமானவர் ராம்சரண். இவரின் மனைவி உபாசனா. இவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றது. உபாசனாவும், தொழிலதிபர் மற்றும் பிட்னெஸ் எக்ஸ்பர்ட் ஆவார். சமூகவலைத்தளத்தில் பிரபலமாகவும் உள்ளவர். ராம்சரண் மற்றும் உபாசனாவிற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரிடம் பலமுறை குழந்தை பிறப்பை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, தாய்மை அடைவது தன்னுடைய சுய தேர்வாக இருக்குமே தவிர, தன்னை யாரும் கட்டாயபடுத்த முடியாது என அவர் கூறினார். மேலும், இது தனக்கும், ராம்சரனுக்குமான தனிப்பட்ட முடிவு எனவும் கூறி இருந்தார்.சமீபத்தில் அன்னையர் தினத்திற்காக அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு தாய்மை குறித்து ஒரு பதிவை இட்டிருந்தார்.
கருமுட்டைகளை சேமித்து வைத்த உபாசனா
அதில், "சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, நான் அதைச் செய்யவில்லை. தாயாக வேண்டும் என்ற எனது முடிவானது, ஒரு பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்றோ, என் திருமணத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தாலோ அல்ல" என குறிப்பிட்டார். இது குறித்து ஒரு ஊடகத்திடம் பேசிய போது, தானும், ராம் சரணும், மனதளவிலும், பொருளாதார ரீதியாகவும் ஒரு நிலையான இடத்தை அடைந்த பின்னர் தான், குழந்தை பெற்று கொள்வது என திருமணத்தின் போதே முடிவு செய்ததாகவும், இதற்காக, திருமணம் ஆன உடனே, தன்னுடைய கருமுட்டையை அவர் சேமித்து வைத்ததாகவும் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கரு முட்டைகளை சேமித்து வைத்து, சமீபத்தில் தாய்மை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.