"யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்": உதயநிதி ஸ்டாலின்
நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் இந்த திரைப்படத்தை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித், நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில், "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏ க்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்?..."என கேள்விகள் பல கேட்டிருந்தார்.
எங்கு நடந்தாலும் தவறு தவறுதான்!
இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்" என கூறி இருந்தார். இந்நிலையில், உதயநிதி இன்று நிருபர்களை சந்தித்தபோது, இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர்,"யாராக இருந்தாலும் சுய விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கு நடந்தாலும் தவறு தவறுதான். அந்த தவறை திருத்திக் கொள்ள எங்கள் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் எங்களை வழிநடத்தி இருக்கிறார்கள். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்படிதான் வழி நடத்துகிறார்" எனக்கூறினார்.